கள்ளச்சாராய செய்தி சேகரிக்க சென்ற 'நியூஸ் ஜெ' நிருபருக்கு சாராய வியாபாரிகள் மிரட்டல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள வானவரெட்டி, திம்மாபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும், கச்சிராயப்பாளையம் பகுதியிலுள்ள கரடி சித்தூர், மாத்தூர், உள்ளிட்ட கிராமங்களிலும் கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கல்லாநத்தம் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளரை, திமுக ஆதரவு வியாபாரிகள் மிரட்டியுள்ளனர். நியூஸ் ஜெ செய்தியாளரின் செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பிடுங்கி வைத்துக் கொண்டு அந்த ஊரின் பிரபல சாராய வியாபாரியான வேலு மற்றும் அவரது உறவினர்கள் ஆபாசமாக திட்டியுள்ளனர். “திமுக எம்எல்ஏ உதயசூரியன் வருகிறார், நீ எங்கேயும் போகக்கூடாது” எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், ஊர்மக்கள் கூடியதால், நியூஸ் ஜெ செய்தியாளரின் செல்போனை சாராய வியாபாரிகள் திருப்பி அளித்துள்ளனர். இது தொடர்பாக நியூஸ் ஜெ செய்தியாளர், சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்களை, கள்ளச்சாராய வியாபாரிகள் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. கள்ளச்சாராயம் விற்போர் மீது கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version