ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி திரைப்படம் மற்றும் தொடர்கள் எடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். படத்தை தொடங்க முன்னணி இயக்குநர்கள் போட்டி போடும் நிலையில், திரைப்படத்திற்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அடுத்த சில தினங்களிலேயே இது தொடர்பான விவாதங்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளதாக அறிவித்தார். அப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் அல்லது நித்யா மேனன் நடிப்பார் என தெரிகிறது. அவரை தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரபல நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி என பெயரில் பட வேலைகளை துவங்கினார்.

இதற்கிடையே கவுதன் மேனன் நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து ஆன்லைன் தொடராக எடுக்கவும் திட்டமிட்டார். இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் களத்தில் குதிக்க அவருக்கு போட்டியாக விஷ்ணுவர்தன் இந்தூரி என்ற இந்தி இயக்குனர் ஜெய என்ற பெயரில் பட வேலைகளை துவங்கினார்.

இதே போல வனயுத்தம் படத்தை இயக்கிய, ஏஎம்ஆர் ரமேஷ் ம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை பற்றிய காட்சிகள் படத்தில் இடம்பெறும் எனவும் அது தனது சுதந்திரத்தை பாதிக்கும் எனவும் ஜெ தீபா வருத்தமடைந்துள்ளார். ஆகவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய திரைப்படம் மற்றும் தொடருக்கு தடைவிதிக்க கோரி ஜெ.தீபா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், கதையை தான் படித்து பார்க்காமல் படத்தை தொடங்க அனுமதிக்க கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், படம் குறித்த செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை முதலில் வெளியிடப் போவது யார் என்ற எதிர்பார்பே அதிகம் நிலவுவதாக பேசப்படுகிறது.

Exit mobile version