'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே' எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமென்றும், தேர்வு பயத்தால் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென்றும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தோல்வி பயத்தால், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த மாணவி கனிமொழி தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தியை கேட்டு, மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். மாணவியை இழந்து வாடும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ள அவர், “வாழ்கை என்பது வாழ்வதற்கே” என நம்பிக்கை ஊட்டியுள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு பிறகு தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பு மட்டுமே வாழ்க்கையாக கருதக் கூடாது என்றும், மருத்துவம் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட இணை படிப்புகளையும் தேர்வு செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய இணை படிப்புகளுக்கு நீட் போன்ற நுழைத் தேர்வு தேவையில்லை எனக் கூறியுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மருத்துவத் துறையின் பலதரப்பட்ட படிப்புகளை விளக்கமாக எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்கொலை முடிவு என்பது ஆபத்தானது என்றும், இதுபோன்ற எண்ணங்கள் மனதில் ஏற்படும் போது, பெற்றோரிடம் உங்கள் நிலை எடுத்து கூறுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு நீங்கள் செய்யும்போது, தற்கொலை முடிவு உங்களை விட்டு அகன்று விடும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாணவி கனிமொழியின் இழப்பே நீட்டுக்கான நமது கடைசி இழப்பாக இருக்கட்டும் என்றும், அனைத்து மாணவச் செல்வங்களையும் கை கூப்பி அன்போடு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில், திமுக அரசு தமது அரசியல் நாடகத்தை நிறுத்திவிட்டு, உண்மை நிலையை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விளக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஆசிரியப் பெருமக்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்ப்பதோடு, நீட் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தால் மற்ற படிப்புகளின் பயன் குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நுழைத் தேர்வு முடிவுகள் வரும் சமயத்தில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உன்னிப்பாக கவனித்து, தக்க அறிவுரை வழங்க வேண்டுமென்றும், இனி மாணவச் செல்வங்கள் இதுபோன்ற விபரீத முடிவினை எடுக்க வேண்டாமென்றும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version