எல்ஐசி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளுக்கு ஆதாயமாக இரண்டாயிரத்து 610 கோடி ரூபாய்க்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டார்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிலேயே மிகப்பெரியதும் பொதுத்துறையைச் சேர்ந்ததுமான எல்ஐசி நாட்டின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பெருமளவில் நிதி வழங்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. மும்பையைத் தலைமையிடாகக் கொண்ட இந்த நிறுவனம் 2018-2019 நிதியாண்டில் 53ஆயிரத்து 214 கோடி ரூபாய் உபரியாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிடப் பத்து விழுக்காடு அதிகமாகும். நடப்பாண்டில் நவம்பர் இறுதிவரை மொத்த ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகளில் 76 விழுக்காட்டைப் பெற்றுள்ளது. இந்நிலையில் எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளுக்குக் கடந்த நிதியாண்டில் கிடைத்த ஆதாயமான இரண்டாயிரத்து 610 கோடியே 74 லட்ச ரூபாய்க்கான காசோலையை எல்ஐசியின் தலைவர் எம்ஆர் குமார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார். அப்போது நிதித்துறைச் செயலாளர் ராஜீவ்குமாரும் உடனிருந்தார்.