நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் பொது மக்களின் வசதிக்காக நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களின் வசதிக்காக நூலகங்கள் அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் அரசு உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் நகர காவல் நிலையம், ஊரக காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் ஆகிய காவல் நிலையங்களில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் செய்தித்தாள்கள், நீதிக்கதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்கள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் அளிக்க வரும் போது காலதாமதமாகும் நேரத்தில், இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம் தெரிவித்தார்.