வரும் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘லிப்ரா’ – எனும் புதிய டிஜிட்டல் பணத்தை அறிமுகம் செய்ய உள்ளது பேஸ்புக் நிர்வாகம். பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் வர்த்தகத் துறையில் நுழைய பேஸ்புக் நிர்வாகம் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி குறித்தும், அதன் டிஜிட்டல் பணம் குறித்தும் பார்ப்போம்…
மனிதனால் தொட்டு உணரமுடியாத கிரிப்டோ கரன்சிஸ் எனப்படும் டிஜிட்டல் பணங்கள் கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து உலகெங்கும் பிரபலமாகி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத் தகுந்த ஒன்று பிட்காயின்.
பொருளாதாரத்தின் எதிர்காலமாக டிஜிட்டல் பணப் பரிமாற்றம் பார்க்கப்படும் நிலையில் ஊபர், ஸ்மார்ட் கார்டு போன்ற பிரபல நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் பணங்களை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன, இவற்றில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறது பேஸ்புக்.
2020ல் முகநூல் நிர்வகத்தினர் வெளியிட உள்ள டிஜிட்டல் பணத்திற்கு லிப்ரா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். லிப்ரா – என்ற சொல்லுக்கு நீதி, சுதந்திரம் உள்ளிட்ட அர்த்தங்கள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றன. இந்த லிப்ரா பணத்தைக் கையாள்வதற்காக ’கலிப்ரா’ – என்ற வாலெட்டையும் பேஸ்புக் நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.
உலகெங்கும் வங்கிக் கணக்குகள் இல்லாத 170 கோடி பேர் உள்ளனர் அவர்களே லிப்ராவின் முதல் இலக்கு. ஒரு குறுஞ்செய்தியை அனுப்புவது போல பணத்தை அனுப்பலாம், ஒரு கைபேசியும் இணையமும் மட்டுமே பணப்பரிமாற்றத்திற்குப் போதும் – என்பதே லிப்ராவின் வணிக உத்தி. இதற்காக வாட்ஸப், மெசேஞ்சர் உள்ளிடவைகளுடன் லிப்ரா இணைக்கப்பட உள்ளது.
ஏற்கனவே உள்ள டிஜிட்டல் பணமான பிட்காயின் பல சிக்கல்களை சந்தித்து வரும் சூழலில், ‘எங்கள் பணம் பிட்காயின் போல இருக்காது, இதற்காக பல்வேறு டிஜிட்டல் பணங்களை ஆய்வு செய்தே லிப்ராவை உருவாக்கி உள்ளோம்’ – என்கிறது பேஸ்புக் நிர்வாகம். ஆனால் பணப்பரிமாற்றம் செய்பவர்களின் தேசிய அடையாளங்களை எப்படி பேஸ்புக் சரி பார்க்கும்? சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் எப்படிக் கட்டுப்படுத்தப்படும்? – என்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை.
டிஜிட்டல் கரன்சிகள் குறித்து இன்னும் இந்திய அரசு தெளிவான கொள்கையை வரையறுக்காத நிலையில் லிப்ராவின் வருகை இந்தியப் பொருளாதாரத்திற்கு பின்னடைவாக அமையவே அதிக வாய்ப்புகள் உள்ளன.