கறிக்கோழி உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியின்றி சோளம் இறக்குமதி செய்ய அனுமதிகோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், நாமக்கல்,சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் சுமார் 4 கோடி கறிக்கோழிகள் விற்பனைக்கு வளர்க்கப்படுகின்றன என்றும், இதன்மூலம் கடந்தாண்டு 4 லட்சம் மெட்ரிக் டன் கோழிகள் மூலம் பெறப்பட்ட கறி விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். இதனிடையே கோழி தீவனத்தில் 47 சதவீதம் சோளம் உள்ளது என்றும்; அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் காரணமாக சோளத்தின் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்டுள்ள சோளம் விலை உயர்வால் கோழிப் பண்ணையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்நாடாகாவிலும் சோளம் விளைச்சல் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, பண்ணையாளர்கள் நேரடியாக சோளம் இறக்குமதி செய்ய அனுமதிக்கவும், அதற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். கோழிப்பண்ணைகளில் ஏற்பட்டுள்ள தீவனத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.