சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சூடான் நாட்டின் தலைநகரமான கார்த்தோமில் உள்ள செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கேஸ் நிரப்பட்ட டேங்கர் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் தொழிற்சாலையில் பணி புரிந்தவர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 130க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், விபத்தில் சிக்கியதாக கூறப்படும் 3 தமிழர்களின் நிலை குறித்து உரிய தகவலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், சூடானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சூடான் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டரில், விபத்தில் இந்திய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்ட மிகவும் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்தில் தனது சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் மோடி கூறினார். மேலும், விபத்தில் காயமடைந்த இந்தியர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.