காங்கிரசில் புயலைக் கிளப்பியுள்ள கடிதம் : மூத்த தலைவர்களுடன் ராகுல் வார்த்தைப் போர்!

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், ராகுல் காந்திக்கும், மூத்த தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. காங்கிரசின் அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட ராகுலுக்கு அக்கட்சியினரே எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணம் என்ன? காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2017ம் ஆண்டு ராகுல்காந்தி பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கர்நாடகா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும் 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். இதனால் வேறு வழியின்றி மீண்டும் சோனியாகாந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். அதேசமயம், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சோனியாவால் உள்கட்சி விவகாரங்களை சரிவர கவனிக்க முடியவில்லை. விளைவு, கடந்த ஒரு வருடத்தில் கர்நாடக, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்கட்சிப் பூசல் காரணமாக ஆட்சியை இழந்தது காங்கிரஸ். ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் புகைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக தலைவரை தேர்ந்தெடுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்த கடிதம் தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது. டெல்லியில் திங்கட்கிழமையன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் சோனியா காந்தி. இதையடுத்துப் பேசிய ராகுல், கடிதம் எழுதியவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இக்கடிதத்தை எழுதியவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் கருத்துக்கு குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்றும் குலாம் நபி ஆசாத்தும், 30 வருடங்களாக கட்சிக்காக உழைத்து வரும் தன்மீது அபாண்டமாக குற்றம் சாட்டுவதாக கபில்சிபலும் எதிர்வினையாற்றினர். இந்நிலையில் தான் அத்தகைய கருத்துக்கள் எதுவும் கூறவில்லை என ராகுல்காந்தி கூறியதை அடுத்து கபில் சிபல் தனது ஆதங்க ட்வீட்டை நீக்கினார். காங்கிரசின் எதிர்காலமாக கருதப்படும் ராகுல் காந்திக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் ஏற்பட்டுள்ள வார்த்தைப் போர் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version