இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த உறுதியேற்போம் : முதலமைச்சர் சுதந்திர தின வாழ்த்து

சாதி, மத பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும் உயர்த்த உறுதியேற்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க இனியநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காந்தியடிகள் தலைமையில் அகிம்சை முறையில் பல்லாயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, அடிமைத் தளத்தில் இருந்து நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். வீரத் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூறும் நன்னாள், இந்த சுதந்திர தின நாளாகும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சுதந்திர தின தியாகிகளை போற்றும் வகையில், தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், அவர்களின் வாரிசு தாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 500 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தி வழங்கி உள்ளதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும், வருங்கால சந்ததியினர் அறியும் வகையிலும் மணிமண்டபங்கள் கட்டப்பட்டு, அரசு சார்பில் விழாக்கள் நடத்துவதையும் முதல்வர் சுட்டிக்காட்டி உள்ளார். சாதி, மத பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும் உயர்த்த உறுதியேற்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version