சத்தியமங்கலம் அருகே, தென்னந்தோப்பில் புகுந்த சிறுத்தை ஒன்று, வெள்ளாட்டை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தில், சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், அரசப்பன் என்ற கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். அரசப்பன், தான் வளர்த்து வரும் 3 வெள்ளாடுகளை வழக்கம் போல் மேய்ச்சலுக்காக தென்னந்தோப்பில் விட்டிருந்தார். அப்போது திடீரென ஆடுகளின் அலறல் சத்தத்தை கண்டு வெளியே வந்து பார்த்த போது, அவரின் வெள்ளாட்டில் ஒன்றை சிறுத்தை கடித்துகொண்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அரசப்பன், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர், இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.