அமேசான் மழைக்காடுகள் பற்றி எரிவதற்குக் காரணம் ஹாலிவுட நடிகர் லியானார்டோ டிகாப்பிரியோதான் என்று பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ தெரிவித்து இருக்கிறார். பிரேசில் அதிபர் கூறுவது என்ன?
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் மழைக்காடுகள், கடந்த ஆகஸ்டு மாதம் மிகப்பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிந்தது. இது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து இருந்தனர். டைட்டானிக் படத்தில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியாண்டோ டிகாப்பிரியோ இது பற்றிக் கவலை தெரிவித்து இருந்தார்.
அது மட்டும் அல்லாது காட்டுத்தீயை அணைப்பதற்கு 5 மில்லியன் டாலர் நிதிவழங்குவதாக டிவிட்டரில் தெரிவித்து இருந்தார். இது இந்திய மதிப்பில் 36ஆயிரம் கோடி ரூபாயாகும். இவரின் பதிவைத் தொடங்கி உலகில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலரும் அமேசான் காட்டுத் தீயை அணைக்க நிதி வழங்க முன் வந்தனர். இந்த நிலையில் அமேசான் காட்டுத் தீ குறித்து பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக் காடுகளுக்க்குத் தீவைக்கப் பணம் கொடுத்துள்ளார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதனையும் பிரேசில் அதிபர் வெளியிடவில்லை.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் லியானார்டோ டிகாப்பிரியோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் அமேசான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் வனத்தையும், தங்களது கலாச்சாரத்தையும் காப்பாற்றப் போராடும் பிரேசில் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்த அமைப்பிற்கும் பண உதவி செய்வதில்லை என்றும் அமேசானைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்குத் தான் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அமேசான் பற்றி எரியும்போது அதற்குக் காரணம் அங்கு உள்ள தொண்டு நிறுவனங்கள் தான் காரணம் என்று தெரிவித்து இருந்தார் பிரேசில் அதிபர். தற்போது ஹாலிவுட நடிகர் லியானார்டோ டிகாப்ரியோவை குற்றம் சாட்டுவது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.