அறுபது ஆண்டுகள் கலைப்பயணம், 17 மொழிகளில் 48ஆயிரம் பாடல்கள் என இசையுலகில் தனக்கென ஒரு சகாப்தத்தை படைத்த எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று.
திரைப்பாடல்கள் வாயிலாக வற்றாத ஜீவநதியாய் என்றும் நமது காதோரம் ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்குயிலின் பிறந்தநாள் சிறப்பு தொகுப்பை காணலாம்..
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி. முதலில் கோரஸ் பாடகியாகவும், பிறகு ஒன்றிரண்டு படங்களில் பாடத்துவங்கிய போதும் பெரிய அறிமுகம் அவருக்கு அமையவில்லை.
1962-ல் வெளிவந்த கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற சிங்கார வேலனே தேவா என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் அவரை கொண்டு போய் சேர்த்தது.
ஆனாலும் கூட பி.சுசீலா, ஜிக்கி, எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோர் ஆதிக்கம் செலுத்த அவ்வப்போது தனது கொஞ்சும் குரலால் மனதை வருடும் பாடல்களை வழங்க ஜானகி தவறவில்லை.
இளையராஜாவின் வருகைக்கு பின்னால் ஜானகியின் இசைப்பயணம் புதிய உச்சத்தை கண்டது.
1970களின் மத்தியில் தொடங்கி அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தமிழ் திரையுலகின் முன்னணி பாடகியாக எஸ்.ஜானகியே திகழ்ந்தார்.
மச்சான பாத்தீங்களா, செந்தூரப்பூவே, பூவரசம்பூ பூத்தாச்சு என 80-களில் புதிய அலையை உருவாக்கினார்.
தொடர்ந்து காற்றில் எந்தன் கீதம், நாதம் என் ஜீவனே, மெளனமான நேரம், ஒரு கிளி உருகுது, புத்தம் புது காலை, இது ஒரு நிலாக்காலம், கண்மணி அன்போடு காதலன், அடி ஆத்தாடி, சின்ன தாயவள் என காலத்தால் அழிக்க முடியாத கானங்களை வழங்கி இன்றளவும் நம்மை தாலாட்டுகிறார்..
90களில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் தனி ரகம்…
ஒட்டகத்த கட்டிக்கோ, கத்தாழங் காட்டுவழி, காதல் கடிதம் தீட்டவே, நெஞ்சினிலே, மார்கழி திங்களல்லவா, என இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்கள் மிக குறைவே, ஆனால் என்றென்றும் இனிமையானவை..
4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள், தமிழ்நாடு அரசின் கலைமாமணி பட்டம் என அவரது திறமைக்கு கிடைத்த விருதுகள் ஏராளம், ஏராளம்.
2013ம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த ’பத்ம பூஷன்’ விருதை மிக தாமதமாகக் கொடுப்பதாக கூறி நிராகரித்தவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் என நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார் ஜானகி.
2016-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் பாடுவதை அவர் நிறுத்திக் கொண்டாலும், ஜானகியின் குரலை கேட்பதை ரசிகர்கள் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்பதே உண்மை.