உலகின் தலைசிறந்த படங்களுக்கு வழங்கப்படும் விருது – என்ற பார்வை ஆஸ்கர் விருதின் மீது உள்ளது. ஆனால் அது உண்மை அல்ல. ஆஸ்கர் விருதை குறிப்பிட்ட ஒரு அமைப்பில் உள்ள சுமார் 7 ஆயிரம் தனி நபர்கள்தான் முடிவு செய்கின்றனர்.
ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் படங்கள் முந்தைய ஆண்டில் வெளிவந்ததாக இருக்க வேண்டும், குறைந்தது 40 நிமிட நீளம் இருக்க வேண்டும், லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள திரையரங்கில் குறைந்தது 1 வாரமாவது ஓடி இருக்க வேண்டும். டாக்குமெண்டரி படங்கள் என்றால் அவை லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமின்றி நியூயார்க்கிலும் 1 வாரம் ஓடி இருக்க வேண்டும் – என்ற விதிகள் உள்ளன. அயல் மொழிப் படங்கள் போன்ற சில படங்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.
தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட் அண்டு சயின்ஸ் – என்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் – உள்ளிட்ட சுமார் 7 ஆயிரம் பேர்தான் எந்தப் படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும், எந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட வேண்டும் – ஆகிய இரண்டையுமே முடிவு செய்கின்றனர்.
இந்த உறுப்பினர்கள் ‘அகாடமி பிராஞ்சஸ்’ என்ற 17 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்களோடு தொடர்புடைய துறைகளில் மட்டுமே வாக்களிக்க முடியும். இப்படியாக இவர்கள் 24 பிரிவுகளில் வெற்றியாளரைத் தீர்மானிக்கிறார்கள். சிறந்த படம் – என்ற ஒரு பிரிவுக்கு மட்டும் அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்கலாம்.
ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் துறையில் 5 சிறந்த நபர்களையோ, படங்களையோ முதலில் பட்டியலிடுவார்கள். இந்தப்பட்டியல்களின் அடிப்படையில்தான் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் படங்களின் பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
எந்தப் படங்கள் பரிந்துரையில் உள்ளன என்று அறிவிக்கப்பட்ட பின்னர், பரிந்துரையில் உள்ள படங்களுக்கு மட்டும் மீண்டும் இவர்கள் வாக்களிப்பார்கள். இதன் மூலம் ஆஸ்கர் விருது யாருக்கு என்பது இறுதி செய்யப்படும்.
ஆஸ்கார் விருது பரிந்துரைகள் நடந்துவரும் காலங்களில், அகாடமி உறுப்பினர்களிடம் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களைத் திரையிட்டுக்காட்டி ஆதரவு கோரலாம். ஆனால் அவர்களுக்கு பரிசுகள் வழங்கக் கூடாது.
முன்பெல்லாம் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு முதல்நாளே விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியாகி வந்தது. இப்போது மேடையில் அறிவிக்கப்படும்போதுதான் வெற்றியாளரை அறிய முடியும்.
ஆஸ்கர் விருது தொடர்பான வாக்குகளை சேகரிப்பது, முடிவுகளை இறுதி செய்வது ஆகிய பணிகளை கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரைஸ் வாட்டர்ஸ் ஹவுஸ் கூப்பர் – என்ற நிறுவனமே மேற்கொண்டு வருகின்றது.