ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும், ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில், பெடரர், ஜோகோவிச், ஆஷ்லே, ஒசாகா உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மெல்போர்னில் நடைபெற்றுவரும் போட்டிகளில், முன்னணி வீரரான ஸ்விட்சர்லாந்தின் பெடரர் மற்றும் செர்பியாவின் ஃபிலிப் கிராஜிநோவிச் இடையே நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில், 6 க்கு 1, 6 க்கு 4, 6 க்கு 1 என்ற நேர் செட்களில் பெடரர் எளிதாக வெற்றியை தனதாக்கி, 3வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு 2வது சுற்று போட்டியில், முன்னணி வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான ஜப்பானின் டாட்சுமா இட்டோவுடன் மோதினார். அதில், 6 க்கு 1, 6 க்கு 4, 6 க்கு 2 என்ற நேர் செட்களில், ஜோகோவிச் வெற்றி பெற்று, 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மகளிர் பிரிவில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே, 2-வது சுற்றில், ஸ்லோவேனிய வீராங்கனை போலோனா ஹெர்காக்கை எதிர்கொண்டு, 6 க்கு 1, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில், உலகின் 3ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான நவோமி ஒசாகா, சீனாவின் ஜெங்கை எதிர் கொண்டார். இதில், ஒசாகா 6 க்கு 2, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வென்று, 3வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற 2-வது சுற்று ஆட்டங்களில், குரோஷியாவின் பெட்ரா மேட்ரிக், டென்மார்க்கின் வோஸ்னியாக்சி, அமெரிக்காவின் கெனின் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.