இந்தியாவில் இந்த ஆண்டிற்குள் புதிதாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும் – யுனிசெஃப்

இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் புதிதாக 2 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என, யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தகவல்களை, ஐநாவின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் மார்ச் 11ம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையிலான காலத்தில் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்ப்பதாக, யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை தொடர்ந்து அதிகபட்சமாக சீனாவில் ஒரு கோடியே 35 லட்சம் குழந்தைகளும், நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என யூனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நாடுகள் பலவற்றில் ஏற்கனவே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாகவும், கொரோனா பரவிவரும் இந்த சூழலில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் யுனிசெஃப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 28 லட்சம் தாய்மார்களும், புதிதாக பிறந்த குழந்தைகளும் இறப்பதாக யுனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, ஒவ்வொரு 11 வினாடிக்கும் ஒருவர் என்ற ரீதியில் உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், கொரோனா பரவல், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை, போதிய மருத்துவர்கள் இன்மை உள்ளிட்ட காரணங்களால் பல லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட, இத்தகைய சிக்கல்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய யுனிசெஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர், நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், பல கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் உள்ளதாகவும், அப்படியே செல்ல நினைத்தாலும் கடுமையான கட்டுப்பாடுகள் அவர்களுக்கு இடையூறாக உள்ளதாகவும் கூறினார். கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை என ஆய்வுகள் கூறுவதாக தெரிவித்த ஹென்றிட்டா ஃபோர், கர்ப்பிணி பெண்களுக்கு முறையான மருத்துவ உதவிகள் கிடைப்பதை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதைப்போல, பலவீனமாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், அந்த குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென யுனிசெப் தெரிவித்துள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கும், புதிதாக குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் குடும்ப உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என யுனிசெப் வேண்டுகோள் விடுத்துள்ளது. தாயிடமிருந்து இருந்து குழந்தைக்கு நோய்த்தொற்று பரவுமா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ள யுனிசெப் நிறுவனம், அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

 

Exit mobile version