தமிழகத்தில் துவங்க உள்ள லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் லண்டன் பயணத்தின் பலனாக, தமிழகத்தில் நிறுவப்படவிருக்கிறது லண்டன் கிங்ஸ் மருத்துமனையின் கிளை. நவீன மருத்துவத்தில் சிறந்து விளங்கும், கிங்ஸ் மருத்துவமனை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சிறந்த உட்கட்டமைப்பு வசதியும், தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனைகள் அதிக அளவில் ஏற்படுத்தப்படுவது மக்கள் பெருக்கம் அதிகமிருக்கும் பகுதிகளுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்று. அந்த வகையில், பல்நோக்கு மருத்துவமனைகளின் பட்டியலில் உலகத்தரம் வாய்ந்ததும், நூற்றாண்டுகள் கடந்த வரலாறு கொண்டதுமான லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் நிறுவப்பட உள்ளது.

1828ம் ஆண்டு துவக்கப்பட்ட கிங்ஸ் மருத்துவமனை 1829 ம் ஆண்டு நான்காம் ஜார்ஜ் மன்னர் காலத்தில், அரசு அங்கீகாரம் பெற்றது. தொடர்ந்து, 1836ம் ஆண்டு மருத்துவப் பல்கலைக்கழகமாக வளர்ச்சியடைந்தது. அன்று முதல் இன்று வரை சுமார் 191ஆண்டுகாலமாக, மருத்துவ உலகில் சேவையாற்றி வருகிறது கிங்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி.

நூற்றாண்டுகால அனுபவமும், உலகெமெங்கும் 300க்கும் மேற்பட்ட கிளைகளையும் கொண்டுள்ள கிங்ஸ் மருத்துவமனை , அந்தந்தப் பகுதியிலுள்ள நோய்களையும், அதன் பரவலையும் கவனம் செலுத்தி தீர்த்து வைப்பதில் சிறந்து விளங்கும் மருத்துவ நிறுவனமாகும்.

மேலும் நீரிழிவு மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் வழங்குவதிலும், உடலின் அடிப்படை கூறான ஒவ்வொரு செல் மருத்துவத்திலும் கவனம் செலுத்தி நோய்களை பூரணமாக குணமடையச்செய்வதில் கிங்ஸ் மருத்துவமனை கல்லூரி சிறந்து விளங்குகிறது.

நிலையான மருத்துவ வளர்ச்சியையும், தரமான மருத்துவத்தையும், போதுமான மருந்து இருப்பு உறுதியையும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழக அரசு , தமிழகத்தில் இந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளது.

நோய்நாடி, நோயின் மூலம் நாடி , நோயை முழுமையாக தீர்க்கும் இந்த மருத்துவமனையின் பங்களிப்பு, தமிழகத்திலிருக்கும் மருத்துவ வசதிகளிலும், சிகிச்சை முறைகளிலும் பல்வேறு விரும்பத்தக்க மாற்றங்களை நிகழ்த்தும். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை, எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் எடுக்கப்பட்டிருக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு, சபாஷ் போடலாம்.

Exit mobile version