நகைச்சுவை நாயகி ஆச்சி மனோரமா – 1200 படங்களில் நடித்து சாதனை

நகைச்சுவையில், நடிகர்கள் மட்டுமே கோலோச்சிய காலத்தில், கோடிக்கணக்கான ரசிகர்களை தன் கலகலப்பான நடிப்பால் கவர்ந்திழுத்து, ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ‘ஆச்சி’ மனோரமாவின் பிறந்தநாள் இன்று.

1943ல் மன்னார்குடியில் பிறந்த மனோரமா மேடை நாடகங்கள் வழியாக திரைப்படத்துறையில் கதாநாயகியாக தடம்பதித்தார். ஆனால் 1958 ஆம் ஆண்டு, ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில், மனோரமாவை நகைச்சுவை நடிகையாக அறிமுகம் செய்தார், கவிஞர் கண்ணதாசன். அதன்பின்னர் அவருக்கு ஏறுமுகம் தான். தில்லானா மோகனாம்பாள், காசேதான் கடவுளடா, கலாட்டா கல்யாணம், பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்தார்.

80-களில் வந்த படங்கள் மூலம் மனோரமா கொடி கட்டி பறக்க தொடங்கினார். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கிஷ்முவிடம் டைவர்ஸ் பற்றி பேசும் கண்ணம்மா கேரக்டரில் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தார்.

குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், நடிகன், பாட்டி சொல்லை தட்டாதே, மைக்கேல் மதன காமராஜன், சிங்கார வேலன் என இவர், நகைச்சுவை நடிகையாக மகுடம் சூடிய படங்களின் பட்டியல் மிக நீளமானது.

நகைச்சுவை மட்டுமல்லாது, குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தவர் மனோரமா. சின்னத்தம்பி திரைப்படத்தில் விதவை தாய் வேடத்தில் நெகிழ வைத்தவர், இந்தியன் படத்தில், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி கேரக்டரில் கண் கலங்க வைத்திருப்பார். பாண்டவர் பூமி படத்தில் மனோரமாவின் நடிப்பை அத்தனை எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.

நடிப்பு தவிர, சில படங்களில் மனோரமா பாடல்களும் பாடியிருக்கிறார். பொம்மலாட்டம் படத்தில் வரும் வா வாத்தியாரே, பாட்டி சொல்லை தட்டாதே படத்தில், தில்லிக்கு ராஜானாலும், மே மாதம் படத்தில் மெட்ராச சுத்தி பாக்க உள்ளிட்ட பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்ட மனோரமா, பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரார். மனோரமா வெறும் நடிகை மட்டும் அல்ல. பெண்கள் நகைச்சுவை நடிப்பில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய சாதனையாளர். தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கும் வரை, மனோரமா வாழந்து கொண்டுதான் இருப்பார்.

 

Exit mobile version