கடைசி நாளில் போட்டி போட்டு விருப்ப மனு வாங்கிய அதிமுகவினர்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஆயிரத்து 750 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து கடந்த 4 ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 4 ம்தேதி விருப்ப மனு வினியோகத்தை அளித்து தொடங்கி வைத்தனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு பெறுவதில் அதிமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டினர். 10 ம் தேதி வரை விருப்ப மனு வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விருப்ப மனு பெற மேலும் நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 5 மணியுடன் விருப்ப மனு வழங்குவது முடிவடைந்தது. இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான அதிமுகவினர் போட்டி போட்டு விருப்ப மனு பெற்றனர். இதுவரை ஆயிரத்து 750 பேர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளனர்.

Exit mobile version