ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தந்தையை படுக்கை இல்லை எனக் கூறி, 4 மணி நேரம் காக்க வைத்து கொன்று விட்டதாக, இளம்பெண் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனாவின் கோர தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருந்து உயிரிழக்கும் நிலையும் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சேனிடோரியம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை படுக்கை இல்லை எனக் கூறி 4 மணி நேரம் காக்க வைத்ததாகவும், இதனால் தனது தந்தை உயிரிழந்ததாகவும் இளம்பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உயிரை விட வேண்டாம் என்றும், அரசு மருத்துவமனையில் ஏழைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். ஆம்புலன்ஸில் தந்தையின் சடலத்துடன் கதறி அழும் பெண்ணின் வீடியோ காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.