கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ்களில் கொரோனா நோயாளிகள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது கோவை. மாவட்டம் முழுவதும் அனைத்து மருத்துமனைகளிலும் படுக்கைகள் நிரம்பியுள்ள சூழலில், தினசரி கட்டுக்கடங்காமல் அதிகரித்து நான்காயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் கோவை அரசு மருத்துவமனை வளாகம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது.
புதிதாக வரும் நோயாளிகள் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே நீண்டநேரம் காத்திருக்கின்றனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் நோயாளிகள் காத்துக் கிடப்பது காண்போரை கலங்கச் செய்கிறது. ஒருபக்கம் நோயாளிகள் குவிந்து கொண்டே இருக்கும் வேளையில், மறுபக்கம் மருத்துவமனைகளில் இருந்து சடலங்கள் வெளியேறி கொண்டே இருப்பது மற்றவர்களுக்கும் மரண பயத்தை ஏற்படுத்துகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி நிரம்பியதால், ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரானா சிகிச்சை சிறப்பு வார்டில் 220 ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பவர்களில் யாருக்கேனும் மூச்சித்திணறல் ஏற்பட்டால், ஆக்சிஜன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை முடுவார்பட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் அவதிப்பட்ட இளைஞர், ஆம்புலன்ஸ் கிடைக்காததால், சரக்கு வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முடுவார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேல்சிகிச்சைக்கு மதுரை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலத்தால் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அலங்காநல்லூர் வட்டாரத்தில் கொரோனா நோயாளிகளுக்கென ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.