தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மணி நேரம் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளால் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டுகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், கொரோனா நோயாளிகள் படுக்கை வசதியின்றி ஆம்புலன்ஸ்களிலேயே இரவு பகலாக காத்துக்கிடக்கும் நிலை தொடர்கிறது. ஆக்சிஜன் வசதி கிடைக்காததால் நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், கொரோனா தொற்று ஏற்பட்ட 400க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களில் வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படுக்கை பற்றாக்குறையால், திருப்பி அனுப்பப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலத்தில் ஆக்சிஜன் படுக்கைக்காக ஏராளமான நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்துக்கிடக்கின்றனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட 900 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. தனியார் மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதாலும், ஏராளமானோர் அரசு மருத்துவமனையையே நாடி வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு புதியதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைக்காக மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸிலேயே பலமணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள 144 ஆக்ஸிஜன் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்புயுள்ளன. இதனால் புதியதாக கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக ஒரே நாளில் 13 பேர் கொரோனா மற்றும் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நள்ளிரவு போதிய ஆக்சிஜன் இல்லாததால் 7 பேர் பலியாகிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் 7 பேர் உயிரிழந்த நிலையில், திருவள்ளூரில் மட்டுமா ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது? தமிழ்நாடு முழுவதும் தான் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் பேசிய ஆடியோ வைரலாகியுள்ளது.