தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டதால், மருத்துவமனை வாயில்களில் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கும் காட்சிகள் நெஞ்சை பிழிந்து வருகின்றன.
இதனால், அவசர சிகிச்சை கிடைக்காமல், உயிர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.
பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மூச்சுத் திணறால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகள், ஆம்புலன்ஸ்களில் அங்கும், இங்கும் அல்லாடும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
மூச்சு விடவே சிரமப்படும் நோயாளிகளுடன் மருத்துவமனை வாயிலில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பதும், திக்கு தெரியாமல் உறவினர்கள் துடிப்பதும் கண்ணீரை வரவழைக்கின்றன.
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சுகளில் காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு உரிய பதில் கிடைக்காமல், “பணம் செலவழித்தாலும் பரவாயில்லை தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம்” என்று எண்ணும் பொதுமக்கள் அங்கும் உரிய சிகிச்சை கிடைக்காததால் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால், கொரோனா நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் படுத்துக் கிடக்கின்றனர்.
ஆக்சிஜன் வசதியுடன் 325 படுக்கைகள் மட்டுமே இருப்பதால், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளை மருத்துவர்கள் அலட்சியமாக நடத்துவதால் உயிர்பலி அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
கொரோனா நோயாளிகள் மற்றும் பொது நோயாளிகளுக்கு ஒரே வார்டில் வைத்து சிகிச்சை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை உறுதிபடுத்தும் விதமாக தனது தாயை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த இளைஞர் ஒருவர், பொது வார்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாகவும், கண்துடைப்பிற்காக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை மாற்றி கொடுப்பதாகவும், சடலங்களை திறந்தவெளியில் மழையில் நனைய விடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே மருத்துவமனை நிர்வாகம் மீதும், அலட்சியமாக நடந்து கொள்ளும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்று அலை கழிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் தலைமைக் காவலர் உள்பட 7 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவதில், தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்