கொசுக்கள் மூலம் கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் அமெரிக்காவின் 2 மாகாண அரசுகள் இயங்கியுள்ளன. அது எவ்வாறு கொசுக்களின் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களை மனிதர்களுக்கு நோய்களைப் பரப்புவதில் கொசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆபத்து நிறைந்த கொசுக்களை ஒழிக்க, பல்வேறு நாடுகளும் விதவிதமாக முயற்சித்து வருகின்றன. எனினும் கொசுக்களை ஒழிப்பது சவாலான பணியாகவே உள்ளது. இந்நிலையில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலம், கொசுக்களின் ஒட்டுமொத்த உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய முயற்சியில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஆய்வகங்களில் ஆண் கொசுக்களின் மரபணு மாற்றம் செய்யப்படுகின்றன. இந்த ஆண்கொசுக்கள், பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, அதன்மூலம் உற்பத்தியாகும் கொசுக்கள், லார்வா நிலையிலேயே அதாவது புழுவாக இருக்கும் போதே இறந்து விடும்.
இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை கோடிக்கணக்கில் உற்பத்தி செய்து திறந்த வெளியில் விட புளோரிடா மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சுமார் 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சவாலான பணியை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்சிடெக் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது. முதற்கட்டமாக புளோரிடா மாகாணத்தின் முக்கிய பகுதிகளிலும் டெக்சாசின் சில பகுதிகளிலும் சோதனை முறையில் மேற்கொள்ளபட உள்ளது. ஆனால் மாகாண அரசின் இந்த முடிவுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பும் அச்சமும் தெரிவித்துள்ளனர். இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளதுடன் சுற்றுப்புற சூழல் சமநிலையையும் பாதிக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது
எதிர்ப்பாளர்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆக்சிடெக் நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலில் இந்த முறையை பயன்படுத்தி கொசுக்களை ஒழித்ததாக தெரிவித்துள்ளதுடன் அங்கு சுற்றுப்புறச்சூழல் சமநிலை பாதிக்கப்படாததையும் சுட்டிக் காட்டியுள்ளது. டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்கள் பரவுவதை இதன்மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.