தமிழக பாஜக-வின் புதிய தலைவராக எல். முருகனை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நியமனம் செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்து வந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராகப் மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவி காலியாகவே இருந்ததால், அந்த பொறுப்பில் யாரை நியமிக்கப் போகிறார்கள் என்பதில் அக்கட்சி தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், பாஜகவின் தமிழக தலைவராக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக உள்ள எல்.முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். புதிய பாஜக தலைவர்
எல்.முருகனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல். முருகனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டதற்கு தனது மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தியுள்ளார்.. மேலும், அவருடைய பணி சிறக்க தனது நல்வாழ்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.