கிர்கிஸ்தான் நாட்டை சார்ந்த பெண் ராணுவ அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட போர் பயிற்சிகள் சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் சிறந்த ராணுவமாக திகழ்ந்து வரும் இந்திய ராணுவத்தின் போர் யுக்திகளை தெரிந்து கொள்வதில் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் நட்பு நாடுகளை சார்ந்த பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளை சார்ந்த 411 பெண்களுக்கு பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிர்கிஸ்தான் நாட்டை சார்ந்த 5 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் பல்வேறு போர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பயிற்சி அதிகாரி கேப்டன் ராதிகா ஜக்கி, இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 5 பெண் ராணுவ அதிகாரிகளுக்கும் நீச்சல், துப்பாக்கி சுடுதல், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.