கே.வி.ஆனந்த் காலமானார் – மாற்றான் இல்லாத அனேகன்

புகைப்படங்களுக்காக புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்ட கே.வி.ஆனந்த் தனது சினிமா வாழ்விலும் அதனை செயல்படுத்தி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று ஜொலித்தவர். கே.வி.ஆனந்தின் கலை பயணம் குறித்து இந்த செய்தித்தொகுப்பு..

 

 

 1966 அக்டோபர் 30ஆம் தேதி சென்னையில் பிறந்த கே.வி.ஆனந்த், விஷ்வல் கம்யூனிகேஷனில் மாஸ்டர் டிகிரி பெற்றவர். புகைப்பட கலைஞராக வேண்டும் என்ற எண்ணத்தோடு, தமிழின் முன்னணி நாளிதழ்களுக்கு பகுதிநேர புகைப்பட கலைஞராக பணியாற்றினார். தொடர்ந்து கிடைத்த ஊக்கம், புகைப்பட கலைத்துறையில் இருந்த ஆர்வம் அவரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றது.

கே.வி.ஆனந்தின் புகைப்பட ஆற்றலை கண்டு அவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார் பி.சி.ஸ்ரீராம். தொடர்ந்து அவரிடம் 5 படங்கள் வேலை செய்து, சிறந்த உதவி ஒளிப்பதிவாளராக தன்னை வளர்த்துக்கொண்டார் கே.வி.. 1994 ஆண்டு வெளியான ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற மலையாள திரைப்படத்தின் வாயிலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமான கே.வி.ஆனந்த், அந்த படத்திற்கு மிகவும் நுட்பமான ஒளிப்பதிவை தந்து தேசிய விருதையும் வென்று திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.

பின்னர் 1996ல் காதல் தேசம் திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுளகில் ஒளிப்பதிவாளராக நுழைந்தார். மறுபுறம் தெலுங்கு, மலையாளம், இந்தி என முன்னணி படங்களில் பணியாற்றினார். 1999ல் முதல்வன் படத்தில் இயக்குநர் சங்கருடன் கைக்கோர்த்தார் கேவி ஆனாந்த். முதல்வன் படத்தின் பிரம்மாண்டம் கே.வி.ஆனந்தின் கைவண்ணம் தான் என்று கூறினால் அது மிகையல்ல. தொடர்ந்து ஹிந்தியில் நாயக், தமிழில் பாய்ஸ், சிவாஜி வரை சங்கரின் பிரமாண்டங்களுக்கு தூணாக இருந்தார்.

தொடர்ந்தது இயக்குநர் அவதாரத்தை கையில் எடுத்தார் கே.வி.ஆனந்த். 2005ல் எழுத்தாளர்கள் சுபாவின் கதை வசனத்தில் உருவான கனா கண்டேன் படத்தை இயக்கினார். அடுத்ததாக சூர்யா நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அயன் திரைப்படம் அனைத்து தரப்பில் பட்டையை கிளப்பி வசூலை வாரி குவித்தது.

கமர்ஷியல் மெகா ஹிட்டான அயன் படத்தை தொடர்ந்து ஜீவா நடிப்பில் கோ படத்தை இயக்கினார். புகைப்பட கலைஞனாக தனது ஆரம்பகால வாழ்க்கையை கதாநாயகனின் பாத்திரமாக அமைத்து அதில் அரசியல், நக்சலைட் குறித்தும் பேசியிருந்தார்.

மீண்டும் சூர்யாவுடன் மாற்றான்,தனுசுடன் அனேகன், விஜய் சேதுபதி- டி.ராஜேந்திரன் கூட்டணியில் கவண், மோகன்லால், சூர்யா, ஆர்யா நடிப்பில் காப்பான் என தன் படங்களில் நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும், ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைத்து, அதற்கு தன் திரைக்கதை திறமையாலேயே மிகப்பெரும் வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார் கே.வி.ஆனந்த். திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக, இயக்குனராக பல சாதனைகளை படைத்த கே.வி.ஆனாந்த் மறைவு திரைத்துறைக்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்

Exit mobile version