குப்பையில்லா கடற்கரையாக மாற்ற 24மணி நேர தொடர் தூய்மை பணி

சென்னையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை குப்பையில்லா கடற்கரையாக மாற்ற சென்னை மாநகராட்சி 24மணி நேர தொடர் தூய்மை பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் உள்ள ஆசியாவிலேயே பெரிய மற்றும் புகழ்பெற்ற மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர். காலை மாலை என 2வேளைகளிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பொதுமக்களால் குப்பைகள் ஆங்காங்கே போடப்பட்டு வருவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக கடற்ரையில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையினால் கடந்த சில மாதங்களாக மெரினா மற்றும் எலியாஸ் கடற்கரையில் பெருமளவு குப்பைகள் குறைக்கப்பட்டு, தூய்மையுடன் காணப்படுகிறது.

இந்நிலையில் உலகின் மிக சுத்தமான கடற்கரையாக மெரினா மற்றும் எலியாட்ஸ் கடற்கரையை மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதலில் சிறிய கடற்கரையான எலியாட்ஸ் கடற்கரையை 24மணி நேரமும் துப்புரவு பணியாளர்கள் மூலம் கண்காணித்து தூய்மை செய்து குப்பையில்லா கடற்கரையாக்கும் பணியில் கடந்த திங்கள் முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்திற்கு 200துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக குப்பை அள்ளும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. குப்பைகளை அள்ளிய பிறகு அவற்றை மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டாக பிரித்து சேகரிக்கப்படுகிறது. இதற்காக சிறு சிறு இடைவெளி விட்டு இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை தொட்டிகளில் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குப்பைகளை சேகரிப்பதற்காக மீன் வடிவிலான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.சுற்றுளா பயணிகளிடம் நேரடியாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியிலும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறு குப்பைகள் கூட இல்லாத அழகிய கடற்கரையாக எல்லிஸ் மாறும் என்றும் பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும்  மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையின் வெற்றியை தொடர்ந்து ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினாவிலும் இந்த பணியான தொடரும். இதற்காக 200பணியாளர்களும், 2 குப்பையள்ளும் இயந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது போன்ற தொடர் துரித தூய்மை நடவடிக்கைகளினால் சென்னையில் உள்ள கடற்கரைகள் புதுப்பொழிவு பெறுவதும் சுற்றுளா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version