குன்றத்தூர் அருகே நாட்டுவெடிகுண்டு வீசி, இளைஞர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே வாலிபர் வெடிகுண்டு வீசி வெட்டிப்படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுராந்தகத்தை சேர்ந்த முருகன் என்பவர், குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலத்தில் வசித்துவந்தார். வீட்டு வேலை செய்துவரும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே சென்றிருந்தனர். அப்போது, 7 பேர் கொண்ட மர்மகும்பல் காரில் வருவதைக் கண்ட முருகன், வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். இதனைக் கண்ட மர்ம கும்பல் தாங்கள் வைத்திருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கதவின் மீது வீசியதால் வெடித்துச் சிதறியது. இதையடுத்து வெளியே வந்த முருகனை அவர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குன்றத்தூர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அங்கு விரைந்து சென்ற போலீசார் முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகன் மீது பல வழக்குகள் இருப்பதால், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடி மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version