திருப்பூர் மாவட்டம் அத்தனூர் அம்மன் மற்றும் குப்பண்ணசாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது…
முத்தூர் அருகே அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் 32 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், 32 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே தொடங்கி நடைபெற்றது. கடந்த 3-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு ,திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோவில் கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பூ தூவிய காட்சி குழுமியிருந்த பக்தர்களை பரவசப்படுத்தியது..