கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலமைச்சராக குமாரசாமி இருந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த 18ம் தேதி குமாரசாமி தாக்கல் செய்தார். இதையடுத்து 4 நாட்களாக தீர்மானத்தின் மீதான விவாதம் சட்டபேரவையில் நடைபெற்று வந்தது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே, நள்ளிரவு ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியே ஆகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா வலியுறுத்தினார். இதனால், நேற்று இரவு 12 மணிவரை சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை முடிக்க வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், பாஜகவுக்கு ஆதரவாக 105 எம்.எல்.ஏக்களும் ஆதரவு அளித்தனர். இதனால் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி 6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது. இதன் மூலம் கர்நாடகாவில் 14 மாதங்கள் நடைபெற்ற குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

Exit mobile version