உன்னாவில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார், அவரிடம் வேலைவாய்ப்புக் கேட்டுவந்த 17 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தச் சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக குல்தீப் செங்கார், அவர் சகோதரர், காவலர்கள் 3 பேர், மற்றும் 5 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து குல்தீப் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்லும் நோக்கில் அவர் வந்த கார் மீது லாரியைக் கொண்டு மோதப்பட்டது. இதில் அந்தப் பெண் படுகாயமடைந்தார். அவர் குடும்ப உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்தனர். இதையறிந்த உச்சநீதிமன்றம் உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு மாற்றியது. இந்த வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.