தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் பொதுமக்களிடம் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் முக்கியமான நிகழ்வாக, பக்தர்கள் வேடமணிந்து காணிக்கை வசூலிப்பதாகும். அதன்படி அம்மனை நினைத்து விரதமிருக்கும் பக்தர்கள் குரங்கு, காளி, மனநிலை பாதிக்கப்பட்டவர் உள்ளிட்ட ஏராளமான வேடங்களை அணிந்து ஆடிப்பாடி பொதுமக்களிடம் காணிக்கை வசூலித்தனர். இவ்வாறு பலதரப்பட்ட வேடமணிந்து காணிக்கை எடுப்பதன் மூலம் அம்மனின் அருளைப்பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுக்களாக பிரிந்து ஊர் ஊராக காணிக்கை வசூலித்து வருகின்றனர். அவ்வாறு வசூலித்த பணம் மற்றும் பொருட்களுடன் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனிடம் காணிக்கையை ஒப்படைத்து வணங்கி விரதத்தை முடித்துக்கொள்வார்கள். தசரா திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான அசுர வதம் 19-ம் தேதி இரவு நடைபெற உள்ளது.