கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.பி அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கேஆர்பி அணையின் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 52 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர் மட்டம் போதிய மழைப்பொழிவு இல்லாததாலும், பாசனத்திற்காக தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் 28 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் விவசாயத்திற்கு நீர் திறந்துவிடப்பட முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அணைக்கு 634 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதே நீர்வரத்து நீடித்தால் அணை ஒரு சில வாரங்களில் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.