மாம்பழங்களின் சில்லறை விற்பனை சந்தையாக கிருஷ்ணகிரி -சேலம் தேசிய நெடுஞ்சாலை மாறியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாம்பழ நகரமான கிருஷ்ணகிரியில் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அல்போன்சா, செந்தூரா, மல்கோவா, நீலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் மாம்பழங்கள் உள்ளூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு 15 ஆயிரம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகிரி -சேலம் சாலையில் சிறுகுறு விவசாயிகள் தற்காலிக கடைகளை அமைத்து மாம்பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் முதல் மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டி வரையிலான தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வரிசையாக நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக மாம்பழ கடைகள் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்கப்படுவதால் அந்த வழியே செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
நேரிடையாக விற்பதால் நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால், கிருஷ்ணகிரி -சேலம் தேசிய நெடுஞ்சாலை மாங்கனிகளின் சில்லறை விற்பனை சந்தையாக மாறி வருகிறது.