16 ஆண்டுகளுக்கு பின் கேஆர்பி அணையிலிருந்து 8500 கனஅடி நீர் வெளியேற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில், 16 ஆண்டுகளுக்கு பிறகு கேஆர்பி அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கேஆர்பி அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 26 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கேஆர்பி அணை ஏற்கனவே முழு கொள்ளளவான 52 அடியை எட்டிய நிலையில், அணையிலிருந்து 16 ஆண்டுக்கு பிறகு பிரதான மதகுகள் வழியாக விநாடிக்கு 8 ஆயிரத்து 568 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. இதேபோல், ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி நீரும், ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பார் அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் விளைநிலங்களையும், வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version