தமிழகத்தில் முதன் முறையாக தையல் இல்லாத நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சவுளூர் கிராமத்தை சேர்ந்த சின்னபொண்ணு என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தீராத கால் குடைச்சல் மற்றும் இடுப்பு வலி இருந்து வந்துள்ளது. கடந்த 9-ந் தேதி கடும் வலியால் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டு வடத்தில் ஜவ்வு பகுதி விளகி, 2 கால்களின் நரம்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார் தலைமையிலான மருத்துவக்குழு அந்த பெண்ணுக்கு நவீன முறையில் தழும்பு, ரத்த போக்கு இல்லாமல், குறுகிய காலத்தில் அறுவை சிகிச்சை முடிந்து வீடுதிரும்பும் வகையில் தையல் இல்லாத நுண்துளை அறுவை சிகிச்சை செய்தனர். தமிழகத்தில் முதன்முறையாக இவ்வகை மருத்துவம் செய்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.