கிருஷ்ணா நதி நீரின் அளவு 2 நாளில் ஜீரோ பாயிண்ட்டை வந்தடையும் – பொதுப்பணித்துறை

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ஆர். ஆகியோர் கிருஷ்ணா நிதி நீர் பெற ஒப்பந்தம் செய்தனர். ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும்.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை 152 கி.மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ள 25 கி.மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்க 13 ஆண்டுகள் ஆனது.

குடிநீர் வழங்கும் நீர் ஆண்டாக ஜூலை முதல் ஜூன் வரை கணக்கின் படி 2 தவணைகளாக குடிநீர் திறப்பது என ஒப்பந்தமானது. ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும்.

1996-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதையடுத்து 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதிகமாக இருப்பதால் 2 நாட்களில் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வந்தடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version