கொரோனா பரவல் கட்டுப்பாடு நடவடிக்கையாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று முதல் சுழற்சி முறையில் கடைகள் இயங்கி வருகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதனடிப்படையில், கோயம்பேடு சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு, சில்லறை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடைகளை முழுவதுமாக மூடுவதற்கு பதிலாக, 50 சதவீத கடைகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மொத்தமுள்ள கடைகளில், ஒற்றைப்படை எண் கொண்ட கடைகள், செய்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் செயல்படவும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கடைகள், திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்படவும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கோயம்பேடு சந்தையில் இன்று 50 சதவீத கடைகள் மட்டும் செயல்படுகிறது. கடைகளை திறப்பதற்கு முன்னரும், கடை மூடிய பிறகும், கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தைக்குள் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.