சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் 3 காவலர்களிடம் 23 ம் தேதி வரை சிபிஐ விசாரணைக்கு மதுரை குற்றவியல் தலைமை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவல்துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து காவலர்கள் செல்லத்துரை, சாமதுரை, வெயில்முத்து ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரி மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். மூவரையும் 23 ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். மீதமுள்ள 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்கள் குணமடைந்தவுடன் விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட 3 காவலர்களுக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், சிபிஐ அதிகாரிகள் குழு அரசு மருத்துவர்கள் வெங்கடேஷ், பாலசுப்பிரமணியன் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர்.
Discussion about this post