நாயகன் ராஜாஜி மிகவும் அறிவு கூர்மை படைத்தவர். மற்றவர்கள் மனதில் நினைப்பதை அப்படியே கண்டுபிடித்து சொல்லக்கூடிய திறன் பெற்றவர். ஆனால் போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், செங்கல்பட்டு அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
ராஜாஜியின் திறமை குறித்து அறிந்த போலீஸ் அதிகாரியான ஆடுகளம் நரேன், அவரை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நல்ல பெயர் எடுக்கிறார்.
இந்தச் சூழலில் ஆடுகளம் நரேனால் ராஜாஜியிடம் ஒப்படைக்கப்பட்ட குற்றவாளி தப்பிச் செல்கிறான். ராஜாஜி அவனை தேடி கண்டுபித்தாரா?.. இத்தனை திறமை மிக்க அவரை ஏன் காவல்துறையில் இருந்து நீக்கினார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது ‘கூர்மன்.’
வித்தியாசமான திரைக்கதை, பாத்திரங்கள் என கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் பிரயான் பி ஜார்ஜ். முதல் படத்திலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும், அதற்கு எப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அழுத்தமாக பேசி இருக்கிறார்.
மூடர் கூடம் மூலம் கவனம் ஈர்த்த ராஜாஜி, இப்படத்தில் கோபம், காதல், பாசம், ஆக்ரோஷம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வசனங்கள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜனனிக்கு நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்கிறார். பால சரவணனின் காமெடியும், ஆடுகளம் நரேனின் முதிர்ச்சியான நடிப்பும் படத்துக்கு பலம்.
சுப்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் பாராட்டுக்குரிய பங்களிப்பை செய்திருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால், ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வை தவிர்த்திருக்கலாம்.