கேரள மாநிலம் பத்தனம்புரத்தை சேர்ந்த மேத்யூஸ், சில பத்திரிக்கைகளில் வேலை செய்துவிட்டு, பின்னர் தெகல்காவில் செய்தியாளராக இணைந்தார். சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடுவது, அதில் தொடர்புடையவர்களை மிரட்டி பணம் பறிப்பது தான் இவருடைய பிரதான வேலை. சமீபத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தமிழக முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக அவதூறு பரப்பும் ஆவணப்படத்தை வெளியிட்டார். இந்த ஆவணப்படத்தில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் வேண்டுமென்றே தமிழக முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் , இந்த விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம் சுமத்திய சயன் மற்றும் மனோஜ் ஏற்கனவே நீதிமன்றத்தில் இது குறித்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் யாருடைய அழுத்தத்தின் பேரில் இவர்கள் முதல்வர் மீது குற்றம் சுமத்தினர் என்பது கேள்வியாக உள்ளது. கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்த ஆண்டு 2017. இத்தனை நாட்கள் சும்மா இருந்து விட்டு ஏன் திடீரென்று இந்த ஆவணப்படத்தை வெளியிட வேண்டும்?. மேலும் இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள சயன் மற்றும் மனோஜ் , எந்த இடத்திலும் ,முதல்வர் நேரடியாக தங்களிடம் ஆவணங்களை கேட்டதாக கூறவில்லை. மாறாக கனகராஜ் தான் , தமிழக முதலமைச்சரிடம் ஆவணங்களை தர இதை செய்கிறோம் என்று சயன் மற்றும் மனோஜிடம் கூறியதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்கிற கேள்வியும் எழுகிறது?
இந்த ஆவணப்படம் வெளியான உடனேயே கொடநாடு விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், இல்லையென்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று அவசர அவசரமாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை கொடுத்து விட்டு அடுத்து ஆளுநரையும் சந்தித்துள்ளார்.திமுக இந்த விவகாரத்தில் இத்தனை அவசரப்படுவது தான் பல தரப்பினரிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கொடநாடு விவகாரத்தில் சயன் மற்றும் மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவின் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகார் அளித்திருந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.இந்த விவகாரத்தில் குற்றவாளிகளாக கருதப்பட்ட சயன் மற்றும் மனோஜை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கொடநாடு விவகாரத்தில் திமுகவின் சதித் திட்டங்களை சட்ட ரீதியாக தவிடு பொடியாக்குவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில் இன்று திமுகவின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சயனை ஜாமினில் வெளியில் கொண்டு வர திமுக முன்னாள் மேயர் மா.சுப்ரமணியத்தின் தனிப்பட்ட புகைப்பட கலைஞர் சுந்தரராஜன், 170-ஏ திமுக வட்ட செயலாளர் மோகன் குமார் ஆகியோர் ஜாமின் பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் மற்றொரு நபரான மனோஜின் ஜாமின் பத்திரத்திலும் 170வது திமுக வட்டச் செயலாளர் கதிர்வேலு கையெழுத்திட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரபாகரன், திருமாறன், அக்பர் பாஷா, புருஷோத்தம்மன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
சயன் மற்றும் மனோஜிடம் வாக்குமூலம் வாங்க தெரிந்த சாமுவேல் மாத்யூஸ், அவர்களை ஜாமீனில் எடுக்க கையெழுத்து போடாதது ஏன்? எத்தனையோ குற்றவாளிகள் வழக்கறிஞர்கள் இல்லாமல் தவிக்க, இந்த இருவருக்கு மட்டும் சம்பந்தமே இல்லாமல் திமுக வழக்கறிஞர்கள் ஆஜரானது ஏன்? இதன் மூலம் அதிமுகவின் புகழை சீர் குலைக்கவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கெடுக்கவும், திமுக சதித்திட்டம் தீட்டி இந்த ஆவணப்படத்தை சாமுவேல் மேத்யூஸ் மூலம் வெளியிட்டது தெரிய வந்துள்ளது. அப்படி ஆதாரம் முழுமையாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை அணுகாமல் தனியாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எந்த புலனாய்வுச் செய்தியையும் வெளியிடாத இந்த தெகல்கா பத்திரிக்கையில் பணியாற்றிய, மேத்யூஸ் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகவும், தேர்தல் ஆதாயத்திற்காகவும், ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்கவுமே ஆவணப்படத்தை வெளியிட்டது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது.