தென்னகத்தின் காஷ்மீர் என புகழப்படும் கொடைக்கானல் உருவாக்கப்பட்ட தினம்

மலைகளின் இளவரசி மனதை மயக்கும் எழிலரசி தென்னகத்தின் காஷ்மீர் என புகழப்படும் கொடைக்கானல் உருவாக்கப்பட்ட தினம் இன்று.

 

இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், நாட்டையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர காரணமாக அமைந்தவைகளில் மிக முக்கியமானவை, இந்நாட்டின் வளமும் வனமும்.

பலதரப்பட்ட நிலப்பரப்புகளை தன்னகத்தே உள்ளடக்கிய இந்தியாவில், தென்னிந்தியப் பகுதிகள் மட்டும் ஆங்கிலேயர்களின் வியப்புக்குரிய பிரதேசமாக காணப்பட்டன.

குறிப்பாக மேற்குத் தொடர்சி மலை அதுவரை ஆங்கிலேயர்கள் கண்டிராத பல வியத்தகு சிறப்புகளுடன் தோற்றமளித்தது.

அடர்ந்த வனமும் அது போர்த்திய ரம்மியமான சூழலும், ஆங்கிலேயர்களை, மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வித்திட்டன.

அதன்படி, 1821ல் பிரிட்டிஷ் நில ஆய்வாளர் Lieutenant P.S. Ward கொடைக்கானல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அதற்கு முன்பாக கொடைக்கானல் மலையில் குடியேறியவர்கள் பலையர் பழங்குடி மக்கள் என, கிறிஸ்துவ காலத்து இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 1834 ல் மதுரை துணை ஆட்சியராக இருந்த J.C Wroughten என்பவர், கொடைக்கானல் பகுதியில் ஆய்வு செய்ய, 1836ம் ஆண்டு தாவரவியலாளர் Dr.Robert Wight நூற்றுக்கும் மேற்பட்ட தாவர வகைகளை சேகரித்துச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

1845ம் ஆண்டில் மதுரை அமெரிக்கன் மிஷினரியைச் சேர்ந்தவர்கள், தற்போதுள்ள தெற்கு ஏரிச்சாலையில் Sunny Side, Shelton என்ற பெயரில் இரண்டு பங்களாக்களை கட்டி குடியேறினர்.

அந்த நாள் கொடைக்கானல் உருவாக்கப்பட்ட தினமாக கருதப்படுகிறது.

1863ம் ஆண்டு மதுரை ஆட்சியர் Sir Vere Levinge, இப்பகுதிகளில் உள்ள நீரோடைகளை தடுப்பணைகள் மூலம் தடுத்து, கொடைக்கானலின் புகழ்பெற்ற ஏரியை உருவாக்கினார்.

மேலும், தூத்துக்குடியில் இருந்து படகுகளை அங்கு கொண்டு சென்று படகு சவாரியையும் துவக்கி வைத்தார்.

அன்று முதல் இன்றுவரை மக்களின் சுற்றுலாவுக்கான தேர்வில், தவிர்க்க முடியாத தலமாக கொடைக்கானல் பரிமளிக்கிறது.

Exit mobile version