கொரோனா எதிரொலியாக, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக பூத்துள்ள பூக்களின் மொட்டுகளை கிள்ளி விடும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலர்கண்காட்சி, பிரயண்ட் பூங்காவில் நடைபெறும். அதே போன்று இந்தாண்டும் புதிய முயற்சியாக, பொன்னாங்கன்னி கீரைகளை கொண்டு, சிங்கம், மயில், பட்டாம் பூச்சி போன்ற உருவங்களை தயார்படுத்தப்பட்டுள்ளன. தோட்டக்கலை துறை சார்பில் லட்சக் கணக்கான புதிய வகையிலான மலர் நாற்றுகள் வரவழைத்து, நடவு செய்யப்பட்டு, தற்போது மலர்கண்காட்சிக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் பிரயண்ட் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த வருட மலர் கண்காட்சி நடைபெறுமா என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது. கண்களை கவரும் வகையில் பூத்துள்ள மலர்கள், தொடர்ந்து பூக்காமல் இருக்கும் வகையில், செடிகளில் உள்ள மொட்டுகளை கிள்ளிவிடும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.