பந்துகளை வீணடித்த ஜாதவ்; ரன்களை கட்டுபடுத்திய பவுலர்கள் – சி.எஸ்.கேவை வீழ்த்திய கொல்கத்தா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐ.பி.எல். தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை அணி, கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக திரிபாதி, சுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். 12 பந்துகளை சந்தித்த சுக்மன் கில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிதீஷ் ராணா 9 ரன்னிலும், சுனில் நரேன் 17 ரன்களிலும் வெளியேறினர். ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடி காட்டிய திரிபாதி 51 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஷேன் வாட்சன், டு பிளசிஸ் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 10 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் டு பிளசிஸ் வெளியேறினார். அடுத்து வந்த அம்பதி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த வாட்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்துகளை சந்தித்த ராயுடு 30 ரன்னிலும், அதிரடியாக ஆடிய வாட்சன் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

13.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 101 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணிக்கு, 67 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையானதாக இருந்தது. ஆனால், பின்னர் வந்த கேப்டன் தோனி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாம் கர்ரன் 17 ரன்களில் வெளியேறினார். முக்கிய கட்டத்தில் கேதர் ஜாதவின் ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றமே அளித்தது. அவர் 12 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜடேஜா 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்த சென்னை அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

Exit mobile version