கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி. கிசான் திட்டத்தில் போலியாக சேர்க்கப்பட்ட விவசாயிகள் கடந்த சில நாட்களாக நமது காதுகளில் ஒலிக்கும் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? என்ன அந்த கிசான் திட்டம்? என்ன மோசடி இந்த திட்டத்தில் அரங்கேறியுள்ளது என்பதை பார்ப்போம். கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா. 2 ஹெக்டேர் அல்லது 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் விதமாக உருவாக்கப்பட்டது தான் இத்திட்டம். இதன் மூலம் ஆண்டுக்கு 6,000 ரூபாயை மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்துகிறது மத்திய அரசு.
75 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், சுமார் 14 கோடி விவசாயிகளைச் சேர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. இந்த திட்டத்திற்கு தகுதியான விவசாயிகளை தேர்வு செய்து அவர்களின் தகவல்களை மத்திய அரசிற்கு அனுப்ப வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. கொரோனா பரவல் காரணமாக விவசாயிகளே நேரடியாக இந்த திட்டத்தில் இணையும் வண்ணம் சில மாறுதல்கள் செய்யப்பட்டது.
இங்கு தான் இடைத்தரகர்கள் ஆட்டத்தை தொடங்கினர். இணையதளம் மூலமாக தகுதியில்லாத விவசாயிகளின் தகவல்களையும் இந்த திட்டத்தில் இணைய வைத்து, அதன் மூலம் அவர்களிடம் இருந்து சிறிய கமிஷன் தொகையை பெற்று லாபம் கண்டனர் இடைத்தரகர்கள். தமிழகத்திற்கு மட்டும் இந்த திட்டத்திற்காக 4 ஆயிரம் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தில் 6 லட்சம் பேர் முறைகேடாக இந்த திட்டத்தில் இணைந்ததையும், 110 கோடி ரூபாய் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதையும் அதிமுக அரசு கண்டறிந்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்தது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து 32 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ள நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.