விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்திற்கு, மண்டல அளவில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை, தற்காலிகமாக நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கிசான் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அளிக்கும் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை விவசாயி அல்லாதோரும் முறைகேடாக பெற்று வந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உதவித் தொகை பெற்றவர்களிடம் இருந்து தொகையானது திரும்ப பெறப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், மண்டல அளவில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநில அளவில் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதனால் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.