பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்திற்கான உழவன் செயலி இணையதளத்தில், விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்யலாம் என வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் வசதிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் உழவன் செயலி எனும் கைபேசி செயலி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதுவரை, 5 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் இச்செயலியினை பதிவிறக்கம் செய்து பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில், இதுவரை முப்பத்து நான்கரை லட்சம் விவசாயிகள் இணைந்து உள்ளனர் என்று தெரிவித்து உள்ளார். மேலும், தற்போது, பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ், மத்திய அரசினால் பராமரிக்கப்பட்டு வரும் பி எம் கிசான் வலைதளத்தில் தகுதியான விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்து இத்திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு தமிழக வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.