கிண்ணிமங்கலம் சொல்லும் தமிழர் தொன்மை!

தமிழகத்தின் தொல்லியல் வரலாற்றில் புதியதொரு வெளிச்சத்தை பாய்ச்சி வருகிறது கிண்ணிமங்கலம். அங்கு அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டு வரும் கல்வெட்டுக்கள் தமிழ் எழுத்துக்களின் தொன்மைக்கு சான்றாக விளங்கி வருகின்றன.

பண்டைய தமிழர்களின் நகர நாகரீகத்திற்கான சான்றாக கீழடி அகழாய்வுகள் விளங்குகின்றன. அந்தவகையில், தமிழ் எழுத்துக்களின் தொன்மையை பறைசாற்ற உதவி வருகிறது மதுரையை அடுத்த கிண்ணிமங்கலம். அங்குள்ள கோயில் ஒன்றில் சமீபத்தில் தமிழி கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் “எகன் ஆதன் கோட்டம்” என்று எழுதப்பட்டிருந்தது. அவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும்போது அந்த கல்வெட்டின் காலம் கிமு 2-ம் நூற்றாண்டு முதல் கிமு 1-ம் நூற்றாண்டிற்கு இடைபட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மற்றொரு கல்வெட்டில் “இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கிபி 7 முதல் 8-ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என தெரிகிறது. வட்டெழுத்துக் கல்வெட்டில் பள்ளிப்படை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே தமிழ்நாட்டின் முதல் பள்ளிப்படை என்றும்.பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகின்றனர்.

தொடர்ச்சியாக அக்கோயிலில் கல்வெட்டுக்கள் கிடைத்து வரும் சூழலில் கடந்த மாதம் கிடைத்த கல்வெட்டு ஒன்று கி.பி.1722ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. விசயரங்க சொக்கநாதன் காலத்தைச் சேர்ந்த 43 வரிகள் கொண்ட இக்கல்வெட்டில் பள்ளிப்படை சமாதிகள் என்ற சொல்லாட்சி இடம்பெற்றுள்ளது. எனவே பள்ளிப்படை என்பது நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் என்பதை குறிப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் கோட்டம் என்ற சொல்லும் இக்கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதன்மூலம் கிண்ணிமங்கலம் தூண், உயிரிழந்தோர் நினைவாக எழுப்பப்பட்ட தூண் என்பதை தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

Exit mobile version