சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனை நவீன வசதிகளுடன் 2 வாரங்களில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட் 750 படுக்கை வசதிகளுடன் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு உள்ள தேசிய முதியோர் நல மைய கட்டிடத்தின் 5 தளமும் ஒவ்வொரு வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதி தீவிர கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு தரை தளத்தில் சிகிச்சை அளிக்க வசதியாக படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு, தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஈசிஜி கருவிகள், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே என நவீன வகையில் தயார் செய்யப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க பெரிய அளவிலான ஆக்ஸிஜன் சிலிண்டர், 30 வென்டிலேட்டர்கள், ஒரே நேரத்தில் பத்து பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவு என அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய முதியோர் நல மையத்தில் 500 படுக்கைகள் வசதியும், அருகில் உள்ள விடுதிகளில் 250 படுக்கைகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன.